இலங்கையின் விமானப்படை வரலாற்றில் ஒரே தடவையில் 153 அதிகாரிகள் பயிற்சி பெற்று வெளியேறியுள்ளனர்.
இலங்கை விமானப்படை கட்டுநாயக்க முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டு 153 அதிகாரிகளை வாழ்த்தியுள்ளார்.
ஜனாதிபதியின் உரை பின்வருமாறு,
இலங்கை விமானப்படை வரலாற்றில் இதுவரை நடக்காத மிகப் பெரிய விடைபெற்றுச் செல்லும் அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
1951ஆம் ஆண்டில், இலங்கை விமானப் படையானது சிறியளவிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல், அது எமது இராணுவத்தின் ஒரு சிறப்புமிக்க, தொழில்சார் மற்றும் மிகவும் திறமையான பிரிவாக வளர்ந்துள்ளது. அது, 2009ஆம் ஆண்டில் முடிவடைந்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மிக முக்கிய பங்கு வகித்தது.
போர் இடம்பெற்ற சில சந்தர்ப்பங்களில், யாழ்ப்பாணக் குடாநாடு, பெரும்பாலும் பராமரிக்கப்பட்டது, படையினரையும் பொருட்களையும் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு விமானப்படை மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாகவே அவ்வாறு பராமரிக்கப்பட்டது.
மோதலின் உச்ச கட்டத்தின் போது பிரதேசத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவசியமான தரைப் படையினரின் போக்குவரத்துக்கும் இவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். திறமையான விமானிகளால் அடையாளம் காணப்பட்ட கடலின் வெகு தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் விநியோகக் கப்பல்கள் உட்பட இலக்குகள் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல்கள், பயங்கரவாதச் சக்திகளைப் பெரிதும் பலவீனப்படுத்தின.
விமானப்படையின் ஆளில்லா விமானங்கள் மற்றும் உளவுப்பிரிவு ஆகியவை, போரின் இறுதிக் கட்டத்தில் முக்கிய தகவல்களை வழங்குவதில் பாரியளவு பங்களித்தன. போரின் போது, 443 விமானப்படை வீரர்கள் தங்கள் தாய்நாட்டின் பாதுகாப்புக்காகத் தம்மால் முடிந்தளவு தியாகங்களைச் செய்தனர். மேலும் 236 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் துணிச்சலான வீரர்களின் தியாகங்களும் போரில் அவர்களது சக படையினரின் முயற்சிகளும் சேர்ந்தே, இலங்கையால் வெற்றிபெற முடியாது என்று நீண்டகாலமாகக் கருதப்பட்ட ஒரு போரை வெற்றிகொள்ள முடிந்தது.
மீண்டும் இலங்கையில் அமைதி திரும்பியது முதல் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் தேசிய பாதுகாப்பைப் பேணுவதிலும், விமானப்படை தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகிறது.
70 ஆண்டுகளுக்கும் மேலாக விமானப்படை வழங்கிய சேவை உண்மையிலேயே பாராட்டுக்குறியது. இலங்கை விமானப்படையின் புதிய அதிகாரிகள் மற்றும் விமானிகள் என்ற வகையில், உங்கள் அனைவருக்கும் அதிகமான உயர் முன்மாதிரிகள் இருக்கின்றன.
இளம் அதிகாரிகளாகிய உங்களின் அடிப்படைக் கடமை, உங்களின் திறமைகளை வளர்த்து, உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதுதான் அந்தக் கடமையாகும். உங்களது நேர்மை குறைபாடற்றதாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் ஒழுக்கம் மிக உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும்.
இராணுவத்தின் தொழில்நுட்பப் அங்கமாக விமானப்படை, முழுமையான திறனை எதிர்பார்ப்பதோடு, நீங்கள் ஒரு விமானியாக அல்லது தரை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் தவறுகளுக்கு இடமளிக்கக் கூடாது. எனவே, உங்கள் தொழில் திறனும் சிறப்பாக இருக்க வேண்டும்.
உங்கள் அறிவை தொடர்ந்து மேம்படுத்தவும் உங்கள் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ளவும், உங்கள் அனுபவத்தின் மூலம் கற்பிக்கப்படும் பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.