13வது திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (30) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றதன் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
13வது திருத்தச்சட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் எமது மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யாகப் பிணையப்பட்டுள்ள சில விடயங்கள் அதில் இருக்கின்றது.
மேலும் அதிலே தெளிவாகவும் சொல்லப்படவில்லை. அத்தோடு இது தொடர்பாக எங்களது கூட்டத்தில் ஆராய்ந்திருந்தோம். இந்தியாவிடம் நாங்கள் 13ஐ பற்றிக் கேட்கத்தேவையில்லை.ஏற்கனவே இந்தியப் பிரதமர் மோடி கூட்டுறவு சமஷ்டி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்று திமுகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே ஜெயலலிதாவால் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது.
இவ்வளவு நடந்த பின்பும் நாங்கள் அதைக் கேட்பது காலத்திற்குப் பொருத்தமானதா என்று எனக்குத் தோன்றவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
என்னுடைய கோரிக்கை 13வது திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்தவர்களிடம் ஒப்பிட வேண்டாம் இது என்னுடைய கோரிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.




















