லண்டனில் வாடகை வாகனம் ஓட்டுநரை நம்பி வாகனத்தில் ஏறி சென்ற பெண்கள் பலர் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மோசமான சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் குற்றவாளி என நீதிமன்றத்தில் உறுதியாகியுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி 33 வயதான ஹோமயோன் அஹ்மடி என்ற ஓட்டுனர், வாடகை வாகனத்தில் ஏறிய 41 வயதான பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அடுத்த மூன்று மாதங்கள் கழித்து 21 வயதான பெண் மற்றும் அவர் தோழியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்றவர்களுக்கு அவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனத் தெரிய வருகிறது.
இந்நிலையில் பொலிஸார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இதன் போது மது போத்தலுடன் பதிவான புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டனர்.
இதையடுத்து தொடர்ந்து சந்தேக நபரை தேடி வந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அவர் மீதான வழக்கு குரொய்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹோமயோனுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மிகவும் ஆபத்தானவர். தனியார் வாடகை ஓட்டுனர் என்ற போர்வையில் எளிதில் தப்ப முடியாத பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார் என நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் பொலிசாரை அணுகினார்கள். அவர்களின் தைரியத்தால் தான் இன்று குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் சிலர் இருக்கலாம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் 101 என்ற எண்ணை இலத்தினை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பெண்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.