பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் பூஸ்ஸ வெல்லபட புகையிரத கடவையில் முச்சக்கரவண்டி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நேற்று காலை உயிரிழந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கோர விபத்தில் புஸ்ஸ பழைய வீதியை சேர்ந்த காலிங்க ஜினதாஸ எனப்படும் 85 வயதுடைய தந்தையும், காலிங்க சுனிமல் என்ற 46 வயதுடைய மகனும், மகனின் மனைவியான லசிக்கா குமார என்ற 48 வயதுடையவரும், லசிக்காவின் தாயாரான 83 வயதுடைய எமிஸ்ஹாமி என்பவருமே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த நால்வரும் கிராம சேவகரை சந்திப்பதற்காக சென்று வீடு திரும்பிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த ரயில் வீதிக்கு பாதுகாப்பு கடவை ஒன்று இல்லை எனவும், அந்தப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மகனால் முச்சக்கர வண்டி ஓட்டப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கடவை இல்லாமையினால் பாதுகாப்பற்ற ரயில் வீதி ஊடாக பயணித்த போது ரயிலில் முச்சக்கர வண்டி மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அனைவரும் வீசப்பட்ட நிலையில் கிடந்தனர். பாதுகாப்பு கடவை இருந்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையில் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பயணங்களை மேற்கொள்ளும் சாரதிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.