முற்கால சோழ அரசர்களால் வெற்றியின் தெய்வமாக நிர்மாணிக்கப்பட்டு திருவிழாக்கள் பல எடுத்து வழிபட்ட உக்கிரகாளியம்மன் தான் இங்கே தென்னூரில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.
திருச்சியில் உள்ள தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிர மாகாளியம்மன் கோவில் உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் எட்டு கரங்களுடன் அம்மன் வடக்கு திசையை நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ‘உக்கிர காளியம்மன்’ என்று அழைக்கப்பட்டாலும், கருணையின் வடிவமாகவும், பக்தர்களின் மனக்குறையை தீர்க்கும் காவல் தெய்வமாகவும் அன்னை விளங்குவது சிறப்பு.
அம்பாளின் வலது புறத்தில் சந்தன கருப்பண்ணசாமியும், இடது புறத்தில் உற்சவ அம்பாள் சன்னிதியும் அமைந்துள்ளன. மேலும் விஷ்ணு துர்க்கை, சங்கட விமோசன ஆஞ்சநேயர், சப்த கன்னியர், மதுரைவீரன், சாம்புகமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன் னிதிகள் அமைந்துள்ளன. உற்சவ காலங்களில் அம்பாள் உலா வருகையில் அவருக்கு முன்னும், பின்னுமாக அரணாக செல்வதே கருப்பண்ணசாமியும், சாம்புகமூர்த்தியும் தான்.
இந்தக் கோவிலின் தல விருட்சம் வன்னி மரமாகும். மேலும், இங்கு திருவோடு மரம் இருப்பது தனிச்சிறப்பு. இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.
முற்கால சோழ அரசர்களால் வெற்றியின் தெய்வமாக நிர்மாணிக்கப்பட்டு திருவிழாக்கள் பல எடுத்து வழிபட்ட உக்கிரகாளியம்மன் தான் இங்கே தென்னூரில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக இவ்விரு கோவில்களிலும் கருவறையில் காட்சியளிக்கும் அம்பிகையின் ஒரே மாதிரியான உருவமைப்பு முன் வைக்கப்படுகிறது.
மேலும், சோழ அரசர்களால் வழிபட்ட உக்கிரமாகாளியம்மன் சிலை காலப்போக்கில் ஆற்றில் அடித்துவரப்பட்டு தென்னூரில் கரை ஒதுங்கியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அம்மனுக்கு கோவில் அமைத்து கடந்த 5 தலைமுறைகளாக வழிபட்டு வருகிறார்கள்.
உக்கிர மாகாளியம்மனை மனமுருகி வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் தொல்லை நீங்கும். மேலும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் அம்மனை மடியேந்தி வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது. கண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தீர்ந்தவுடன் அம்மனுக்கு புடவை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.
மேலும், தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஒரு சில பக்தர்கள் அம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபாடு செய்வார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படாது.
கோவில் திருவிழாக்கள்
சித்திரை:- சித்ரா பவுர்ணமியையொட்டி உக்கிர மாகாளியம்மனுக்கு தென்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், தீர்த்தக் குடம் மற்றும் அக்னி சட்டியுடன் ஊர்வலமாக வந்து வழிபடுவார்கள். அதன்பிறகு அம்பாளுக்கு ராஜ மகா அபிஷேகம் நடைபெறும்.
ஆடி:- ஆடி மூன்றாம் வெள்ளியன்று 1,008 திருவிளக்கு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆவணி:- ஆவணி மாதத்தில் கூடிவரும் மிருக சீரிட நட்சத்திரத்தன்று சதகண்டி ஹோமம் நடைபெறும்.
மார்கழி:- அம்பிகை திருப்பள்ளி எழுச்சி.
தை:- பவுர்ணமி அன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை.
பங்குனி:- பங்குனி மாதம் இரண்டாம் வாரத்திற்குப்பின் அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நடைபெறும். அதன் பின்பு 15 நாட்களுக்கு அம்பாள் விரதம் இருப்பதாக ஐதீகம். அந்த நாட்களில் எவ்வித பூஜைகளும் நடைபெறாது. மேலும் அம்மாதத்தின் கடைசி செவ்வாய் அன்று அம்பாள் புறப்பாடு நடைபெறும். இந்நிகழ்வு காளிவட்டம் என அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் அம்பாளை தரிசிப்பது போல், தனது பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதற்காக அவள் கிளம்புவதாக ஐதீகம். புதன்கிழமை சுத்த பூஜை, சப்பரத்தில் பவனி மறுதினம் திருத்தேர் ஊர்வலம் நடைபெறும். அதன்பின்னர் கருப்பசாமி அருள்வாக்கு (குட்டி குடித்தல்) நிகழ்வு, வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டும், சனிக்கிழமையன்று அம்பாள் குடிபுகுதலுடன் விழா நிறைவுபெறும்.