ஒமைக்ரான் அல்லது அதுபோன்ற வேறு ஏதேனும் மாறுபாடுகள் அடுத்து தோன்றினால் அதை எதிர்த்துப் போராட ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதற்கான வழிகள்:
கொரோனா வைரசின் மாறுபட்ட திரிபுகள் பரவி, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 2-வது அலையுடன் ஒப்பிடும்போது 3-வது அலையில் உருவான ஒமிக்ரான் மூலம் உயிரிழப்புகள் குறைந்திருந்தாலும் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் பலர் அவதிப்படுகிறார்கள்.
ஒமைக்ரான் நோய்த்தொற்றை தடுப்பதற்கும், நோய் பாதிப்புக்குள்ளானால் அதில் இருந்து மீள்வதற்கும் சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமானது. ஒமைக்ரான் அல்லது அதுபோன்ற வேறு ஏதேனும் மாறுபாடுகள் அடுத்து தோன்றினால் அதை எதிர்த்துப் போராட ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதற்கான வழிகள்:
1. கொழுப்பின் தேவை:
கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கெடு விளைவிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி போன்ற உயிர் காக்கும் ஹார்மோன்களின் உற்பத்தி உட்பட பல முக்கியமான செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. நல்ல கொழுப்புகள் மற்றும்
கார்போஹைட்ரேட்டுகள்:
கொலஸ்ட்ரால் எல்லாமே உடலுக்கு கெடுதி விளைவிப்பதில்லை. ஆனால் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது ரத்த நாளங்களில் சுவர்களில் படிந்துவிட கூடும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். நரம்புகளை பாதுகாக்கவும், ஆரோக்கியமான செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கவும் கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் மாவு போன்ற வெள்ளை கார்போஹைட்ரேட்டுகள் அடங்கிய உணவுகளில் எல்.டி.எல். கொழுப்பு சேர்ந்திருக்கும். வனஸ்பதி, அதிகம் பதப்படுத்தப்பட்ட சூரியகாந்தி அல்லது அரிசி தவிடு எண்ணெய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக நெய், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற நிறைவுற்ற கொழுப்புகளை கொண்ட உணவு பொருட்களை பயன்படுத்தலாம்.
சர்க்கரை பானங்கள், இனிப்பு பால் பொருட்கள், சுத்தி கரிக்கப்பட்ட தானியங்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து, முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளலாம்.
3. புரதம்:
உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 1 கிராம் புரதம் உட்கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் உடல் எடை 70 கிலோ இருந்தால் 7 கிராம் புரதம் உட்கொள்ள வேண்டும். புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நீண்ட நேரம் ஆற்றலுடன் வைத்திருக்க உதவும். குறைவான கலோரிகளை உட்கொள்வதற்கும் வழிவகுக்கும். பால், தயிர், பன்னீர், முழு தானியங்கள், பருப்புகள், கடல் உணவுகள் போன்றவை புரதம் நிரம்பிய இயற்கை உணவுப் பொருட்களாகும். அவற்றை தினசரி உணவில் சரியான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
4. துரித உணவுகள்:
துரித உணவுகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லை. அதன் ருசிதான் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும். அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். துரித உணவுகளில் இருக்கும் பதப்படுத்தப்பட்ட எண்ணெய் மற்றும் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் நோய் எதிர்ப்பு மண்டலமும் பாதிப்படையும். ஒமிக்ரான் போன்ற கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகளை எதிர்த்துப் போராடும் அளவுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்காது. எனவே, இந்த காலகட்டத்தில் துரித உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது.
கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம், தடுப்பூசி, சமூக இடைவெளி அவசியமானது. அதுபோல் உடற்பயிற்சிக்கும் தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும்.