முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இருந்து கருப்புச் சந்தை ஆயுதக் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்திருந்தார்.
முதலாவதாக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் நிலையில் அங்கு இலங்கை சாதாரண வர்த்தகத்தில் ஈடுபடுவதையே அமெரிக்கா விரும்பவில்லை.
அப்படி இருக்கையில் ஆயுதக் கொள்வனவை அதுவும் கருப்பு சந்தையில் வடகொரியா மூலம் இருந்து இலங்கை அரசு பெற்றதை அமெரிக்கா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்பதை இலங்கை அரசுக்கு தெரியும்.
அப்படி தெரிந்திருந்தும் ஏன் பொறுப்பு வாய்ந்த நிதி அமைச்சர் இவ்வாறு தகவலை பகிரங்கமாக கூறினார் என்ற கேள்விக்கான பதில் மிகவும் முக்கியமானது. இத்தகவலை இவர் வெளியிட்டதன் மூலம் இரண்டாவதாக இன்னொரு பாரிய பிரச்சினை இங்கு காத்திருக்கின்றது.
அதாவது வட கொரியாவில் இருந்து இரசாயன ஆயுதங்கள் மற்றும் கொத்துக்குண்டுகள் போன்ற சர்வதேசரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இலங்கை அரசு பெற்றுள்ளது என்ற பலமான குற்றச்சாட்டு இங்கு இலகுவாக வைக்கப்பட கூடியது.
எனவே இப்படி அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி வட கொரியாவில் இருந்து கள்ளச் சந்தையில் இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கியது என்ற குற்றச்சாட்டும், அதுவும் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வாங்கி தமிழ் மக்களை படுகொலை செய்யப் பயன்படுத்தி உள்ளது என்ற ஆழமான குற்றச்சாட்டும் இங்கு எழக்கூடிய நிலையில் ஏன் இவ்வாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு உண்மையை அவிழ்த்துவிட்டார் என்ற கேள்வி பலமாக எழுகிறது.
முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களையும் கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்தி தமிழ் மக்களைப் படுகொலை செய்தது என்கின்ற ஆழமான குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
வடகொரியா சட்டவிரோதமான முறையில் கள்ளச் சந்தையில் ஆயுதங்களை விற்பனை செய்திருப்பதனால் அவை இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளாக இருக்க முடியும் என்கின்ற கருத்து வலுவாக எழமுடிகிறது. இது கொத்துக் குண்டு வீசப்பட்டதற்கான ஒரு ஆதாரமாக முன்வைக்கப்பட கூடியதாய் இருக்கின்றது.
எந்த நாட்டிலிருந்து அல்லது நாடுகளிடமிருந்து இலங்கை அரசு இவ்வாறு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பெற்றது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால் பசில் ராஜபக்ஷவின் தகவலின்படி அத்தகைய ஆயுதங்களை சட்டவிரோத கள்ளச் சந்தை வியாபாரத்தில் ஈடுபடும் வடகொரியாவிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது தெரியவருகிறது.
இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான தகவலை பசில் ராஜபக்ச வெளிப்படையாக முன்வைத்ததற்குப் பின்னணியாக ஒரு பலமான காரணமும் தேவையும் ஆளும் ராஜபக்ஷ குடும்பத்துக்கு உண்டு என்பது இங்கு பெரிதும் கவனத்துக்குரியது என்பதே உண்மை.
இலங்கை அரசு தற்போது பொருளாதார ரீதியில் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இது இலங்கையை ஆளும் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை பெரிதும் பாதிக்கப்படவல்லதாய் காணப்படுகிறது.


















