கேரளாவில் காதல் கணவருக்கு கல்லீரலையே தானமாக வழங்கிய மனைவியின் செயல் பலரையும் நெகிழ வைத்தது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
காதலர் தினம் என்பது காதலர்களுக்கு மட்டுமல்ல, காதல் மணம் புரிந்த தம்பதிகளுக்கும் பொருந்தும். அதனை ஒவ்வொரு ஆண்டும் அவர்களும் கொண்டாடி மகிழ்வார்கள்.
இது கணவன்-மனைவிக்கு இடையேயான அன்னியோன்யத்தை காட்டுவதாக அமையும். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஒரு தம்பதி காதலர் தினமான நேற்று அனைவரின் மனதையும் நெகிழ வைக்கும் செயலை செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சுபீஷ். இவரது மனைவி பிரவிஜா. ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை இனிமையாகவே சென்றது. இருவரும் பரஸ்பரம் காட்டிய அன்பின் பயனாக இரண்டு குழந்தைகளும் பிறந்தனர்.
அதன் பின்பு குழந்தைகளின் நலனுக்காக சுபீஷ், தீவிரமாக உழைக்க தொடங்கினார். சில ஆண்டுகளிலேயே அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. பிரவிஜா, அவரை ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்றார். எர்ணாகுளம் தனியார் ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுபீசுக்கு கல்லீரலில் பாதிப்பு இருப்பதை கண்டு பிடித்தனர்.
இதனை அறிந்ததும், சுபீசும், அவரது மனைவி பிரவிஜாவும் அதிர்ந்து போனார்கள். மருத்துவ செலவுக்கு என்ன செய்வது? என்று கதிகலங்கிய தம்பதி, கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சுபீசுக்கு மாற்று கல்லீரல் பொருத்தினால் மட்டுமே அவர் குணமடைவார் என்று கூறிவிட்டனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக செய்துவிடலாம் என்றாலும், சுபீசுக்கு கல்லீரல் தானம் வழங்க யார்? முன் வருவார்கள் என்ற கேள்வி இருவர் மனதிலும் எழுந்தது.
அப்போதுதான் தன் காதல் கணவருக்கு தன் கல்லீரலையே தானமாக வழங்கினால் என்ன? என்ற எண்ணம் பிரவிஜா மனதில் தோன்றியது. இதுபற்றி அவர் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் கூறினார். அவர்கள் பிரவிஜாவின் கல்லீரல், அவரது கணவருக்கு பொருந்துமா? என்பது குறித்த பரிசோதனையில் ஈடுபட்டனர்.
பரிசோதனை முடிவுகள் சாதகமாக வந்ததை தொடர்ந்து பிரவிஜாவின் கல்லீரலை அவரது கணவர் சுபிசுக்கு பொருத்தலாம் என டாக்டர்கள் கூறினர். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த பிரவிஜா, தனது ஆசை கணவருக்கு காதலர் தினத்தில் இந்த ஆபரேசனை செய்யுமாறு டாக்டர்களிடம் கேட்டு கொண்டனர்.
பிரவிஜாவின் வேண்டுகோளை டாக்டர்களும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி காதலர் தினமான நேற்று கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சுபீசுக்கு ஆபரேசன் நடைபெற்றது.
காலையில் தொடங்கிய ஆபரேசன் சுமார் 18 மணி நேரம் நடந்தது. இதில் பிரவிஜாவின் கல்லீரல், அவரது கணவர் சுபீசுக்கு பொருத்தப்பட்டது. ஆபரேசனுக்கு பிறகு சுபீசின் உடல்நிலை நன்றாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் காதல் கணவருக்கு கல்லீரலையே தானமாக வழங்கிய மனைவியின் செயல் பலரையும் நெகிழ வைத்தது.