தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமை நிரூபணமாகியுள்ளது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தளம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
கோட்டாபய ராஜபக்சவின் பிரான்ட்(பண்டக்குறி) தேசிய பாதுகாப்பாக இருந்தது, ஈஸ்டர் தாக்குதலை அவர் சந்தைப்படுத்திக் கொண்டார்.
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் அம்பலப்படுத்தப்படுவார்கள் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நம்பிக்கை கொண்டனர்.
இந்த தாக்குதலை தவிர்க்க தவறியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
இந்த இருவருக்கும் எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் 845 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக தெரிவித்தது. பூஜித்தும், ஹேமசிறியும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டால், உண்மையில் யார் இந்த தாக்குதலை தடுக்கத் தவறியது?
தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் கூறப்படுவோர் சிலர் அரசாங்க சாட்சியாளர்கள் ஏனையவர்கள் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்கள். தாக்குதலை திட்டமிட்ட எவரையும் இதுவரையில் கண்டறியவில்லை.
தாக்குதலை நடத்திய மற்றும் தடுக்க தவறிய தரப்பினருக்கு தண்டனை விதிக்க இந்த அரசாங்கத்தினால் முடியவில்லை. நாடு இன்று அராஜக நிலை அடைந்துள்ளது.
அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தாக்குவதாக தொலைபேசியில் மிரட்டிக் கொள்கின்றனர். அமைச்சர்களுக்கே ஜனாதிபதியை சந்திக்க முடியாது என சிலர் கூறுகின்றனர், இவ்வாறு நாட்டை அல்ல கோழிப் பண்ணையொன்றையும் நிர்வாகம் செய்ய முடியாது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.