உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷ்யா, இன்று அதிகாலையில் உக்ரைன் மீது வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி போரை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இதற்கு உலக நாடுகள் பல கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையில், ரஸ்யாவிற்கு எதிராக அமெரிக்கா பகிரங்க அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தியுள்ள ரஷ்யா மற்றும் ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின், இனி உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளை விவரித்துள்ளதுடன்,ரஷ்யாவின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகளையும் விதித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ரஷ்யா மீது நீண்டகால தாக்கத்தை அதிகரிக்கவும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீதான அதன் தாக்கத்தை குறைக்கவும் வலுவான தடைகளை இனி விதிக்கவிருக்கிறோம்.
டொலர்கள், யூரோக்கள், பவுண்டுகள், யென் போன்றவை மூலம் வணிகம் செய்யும் ரஷ்யாவின் திறனைக் கூட்டாகக் கட்டுப்படுத்த முடிவெடுத்த G7 தலைவர்களுடன் தாமும் உடன்படுகின்றாம்.
ரஷ்யாவின் நிதியுதவி மற்றும் ராணுவத்தை வளர்க்கும் திறனை இனி அமெரிக்கா தடுத்து நிறுத்தும். 21ஆம் நூற்றாண்டின் உயர் தொழில்நுட்ப பொருளாதாரத்தில் போட்டியிடும் ரஷ்யாவின் திறனை இந்த தடைகள் குறைக்கும்.
ரஷ்ய ரூபிள் பண மதிப்பு மிக, மிக மோசமான நிலையை அடையும். ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பிறகு ரஷ்ய பங்குச் சந்தை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
“ஒரு ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு சொத்துக்களை வைத்திருக்கும் ரஷ்ய வங்கிகள் மீது இப்போது தடைகளை விதிக்கிறோம்.
“நாங்கள் ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றை ஏற்கெனவே சர்வதேச நிதி விவகாரங்களில் தலையிடாத வகையில் துண்டித்துவிட்டோம். அந்த வங்கி அந்நாட்டின் வங்கிச் சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது,” என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.