கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ராஜபக்ச அரசாங்கம், கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற 12,000ற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியக் பணிக்கொடை உதவித்தொகையை வழங்கவில்லை என முன்னணி தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
”கடந்த வருடம் டிசம்பர் 31வரை ஓய்வுபெற்ற 12,483 பேருக்கு, ஆயிரத்து முன்னூற்று முப்பத்து நான்கு கோடி பணிக்கொடை உதவித்தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது” ஓய்வூதியத் திணைக்களம் இதுவரையில் பணம் வழங்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இவ்வாறு ஓய்வூதிய கொடுப்பனவை அரசாங்கம் வழங்கத் தவறியதோடு, ஓய்வுபெறும் நாளிலிருந்து ஓய்வூதியத்தையும் முறையாக வழங்கவில்லை என தொழிற்சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியம் பெறுபவர்களின் மாதாந்த ஓய்வூதியத்தின் இருபத்தி நான்கு மடங்கு ஓய்வூதியக் பணிக்கொடை உதவித்தொகையாக வழங்கப்படுவதாக ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.



















