குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள் இலங்கை பொலிஸார் மன்னாரில் இருந்து மீட்டுள்ளனர்.
மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மீட்கப்பட்ட ஆமைகள் அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்தவை என்பதுடன், ஒவ்வொரு ஆமையும் சுமார் 100 கிலோகிராம் எடை கொண்டது.
மேலும், கடலாமைகள் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கடலில் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த வீட்டில் சந்தேகநபர்கள் எவரும் இருக்கவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, உலகில் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன.
இதில் பேராமை, பெருந்தலை, தோணி, ஆலிவ், அலுங்கு ஆகிய ஐந்து வகை ஆமைகள் இந்தியாவில் உள்ளன. இந்த ஆமைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகம் உள்ளன.
பேராமை கடற்பாசிகளையும், அலுங்கு ஆமை கடற் பஞ்சுகளையும், பெருந்தலை ஆமை நண்டுகள் மற்றும் மெல்லுடலிகளையும், தோணி ஆமை ஜெல்லி மீன்களையும் உண்கிறது.
ஆமைகளின் கண்கள் சிறிதாக இருந்தாலும் பார்வை மிகவும் கூர்மையானது. தோல் கடினமாக இருக்கும். ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்யும்.
கருவுற்ற பெண் ஆமைகள் கடற்கரையில் மணலில் ஆழமான குழி தோண்டி முட்டையிடும். இதற்காக பல ஆயிரம் கி.மீ., கூட பயணிக்கும்.பெருந்தலை ஆமைகளைத் தவிர, மற்ற ஆமைகள் இந்திய கடற்கரையில் முட்டையிடும். இவைகள் 50 முதல் 80 செ.மீ., ஆழத்தில் குழி தோண்டி 200 முட்டைகள் வரை இடும்.
பின் அவற்றை மண்ணால் மூடிச்செல்லும். பொதுவாக ஆமைகள் நவ., முதல் ஏப்., வரை முட்டையிடும். தமிழகத்தில் தரங்கம்பாடி பழையாறு கடற்கரை, மாமல்லபுரம், சென்னை கடற்கரை, பாயின்ட் காலிமர் நாகப்பட்டினம் கடற்பகுதிகளில் அதிகளவு முட்டையிடுகின்றன.
ஆலிவ் ஆமைகள் அதிகளவில் சென்னை கடற்கரையில் முட்டையிடுகின்றன. சூரிய வெப்பத்தில் 60 முதல் 90 நாட்களில் முட்டை பொரித்து வெளிவரும் குஞ்சுகள் ஊர்ந்து கடலுக்குள் சென்றுவிடுகின்றன.
இந்த வகை ஆமைகள் கடலில் மீன்பிடி விசைப்படகுகள், இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளால் அதிகளவு உயிரிழக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.