ரஷ்யர்கள் தலைநகர் கிவ்வை இன்னும் சில மணிநேரங்களில் தாக்குவார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரஷ்யப் படைகள் அருகிலுள்ள விமானத் தளத்தைக் கைப்பற்றிய நிலையில் கிவ்வில் புதிய வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிவ் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில், குடியிருப்பாளர்கள் நகரின் நிலத்தடி மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரயில்கள் திறந்த நிலையில் உள்ளன மற்றும் அவற்றின் நடைமேடைகளில் மக்கள் தங்குவதற்கும், வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி சில மணி நேரங்களுக்கு முன்னர் மெட்ரோவில் ஒரு பெண் தனது குழந்தையைப் பெற்றெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி போதைக்கு அடிமையானவர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மற்றும் அவர் தலைமையிலான குழுவினர் “போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் நவ நாஜிகளின் குழுவினர்” என்று உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு கடினமான, ஆனால் தைரியமான நாளை எதிர்கொண்டமைக்காக அவர் நாட்டு மக்களை பாராட்டினார்.
“இந்த இரத்தக்களரியை முடிப்பதே தமது முக்கிய குறிக்கோள்,” என்று அவர் கூறினார்.
உக்ரேனிய துருப்புக்களுக்கு ரஷ்ய படைகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதை ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டாலும், அவர் “எதிரிகள் மிகவும் கடுமையான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளனர் என்று கூறினார். “நியாயப்படுத்த முடியாத இந்த ஆக்கிரமிப்பை உக்ரேனியர்கள் வீரத்துடன் எதிர்க்கின்றனர் ” என்று அவர் மேலும் தெரிவித்தார்.