தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தலின் வாக்குபதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என 2 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் தற்போது 1907 பேருக்கு மட்டுமே வாக்குரிமை இருக்கிறது.
தற்போதைய தலைவர் ஆர்.கே.செல்வமணியின் பதவிகாலம் முடிந்ததால், புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள தாய் சத்யா பள்ளி வளாகத்தில், இந்த தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 738 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.
தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணை தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் என இந்த தேர்தல் மூலம் தேர்வு செய்ய இருக்கின்றனர். அந்த வகையில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி தனித்தனி அணியாக போட்டியிடுகின்றனர். இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.