ஆயிரக்கணக்கான நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சர்வதேச பணப்பரிவர்தனை சேவை அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து பல ரஷ்ய வங்கிகளை விலக்கி வைக்க ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்களும் இதன்மூலம் முடக்கப்படும். இது, ரஷ்யாவின் வெளிநாட்டு கையிருப்புகளை அணுகும் திறனைக் கட்டுப்படுத்தும்.
“சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவதே இதன் நோக்கம்” என, இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ரஷ்யா ஸ்விஃப்ட் சேவையையே அதிகம் சார்ந்திருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக இன்றுவரை விதிக்கப்பட்ட நடவடிக்கைகளில், இது மிகக் கடுமையானதாகும்.
ஸ்விஃப்ட் என்றால் என்ன?
ஸ்விஃப்ட் என்பது உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளுக்கான சேவை அமைப்பு ஆகும். அதாவது, எல்லைகளைத் தாண்டி பணத்தை பாதுகாப்பாகவும், விரைவாகவும் அனுப்ப இந்த முறை அனுமதிக்கிறது.
ஸ்விஃப்ட் என்பது, சொசைட்டி ஃபார் வேர்ல்டுவைட் இன்டர்பேங்க் ஃபைனான்சியல் டெலிகம்யூனிகேஷன் (Worldwide Interbank Financial Telecommunication) என்பதன் சுருக்கமாகும்.
1973 இல் இது பெல்ஜியமில் உருவாக்கப்பட்டது. ஸ்விஃப்ட், 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்விஃப்ட்டில் இருந்து ரஷ்யாவை தடை செய்வது அதை எவ்வாறு பாதிக்கும்?
ஸ்விஃப்டில் இருந்து எந்த ரஷ்ய வங்கிகள் அகற்றப்படும் என்பது தற்போது தெளிவாகத்தெரியவில்லை. இது வரும் நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான பண பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்விஃப்ட் சேவையிலிருந்து ரஷ்ய வங்கிகளை நீக்குவது, பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.
வெள்ளை மாளிகையின் வார்த்தைகளில் சொல்லப்போனால், ரஷ்யா பணப்பரிவர்த்தனைக்கு “டெலிபோன் அல்லது ஃபேக்ஸ் இயந்திரத்தை” சார்ந்திருக்க வேண்டிவரும். ஸ்விஃப்ட் வழங்கும் சாதாரண, எளிமையான மற்றும் உடனடி பரிவர்த்தனை வசதியில் இருந்து ரஷ்ய நிறுவனங்களை விலக்கிவைப்பதே இதன் நோக்கம்.
ரஷ்யாவின் மதிப்புமிக்க எரியாற்றல் மற்றும் விவசாயப் பொருட்களுக்கான பணவரவு கடுமையாக பாதிக்கப்படும். வங்கிகள் ஒன்றுக்கொன்று நேரடியாகச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
தாமதங்கள் மற்றும் கூடுதல் செலவுகள் ஏற்படும். இதனால் ரஷ்ய அரசின் வருவாய் குறையும்.
ஸ்விஃப்ட் தொடர்பாக மேற்கத்திய நாடுகள் ஒருமித்த கருத்தை ஏன் எட்ட முடியவில்லை?
ரஷ்யாவை அகற்றுவதால், ரஷ்யாவில் இருந்து பொருட்களை வாங்கும் மற்றும் ரஷ்யாவுக்கு பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பாக ஜெர்மன் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பெரும்பாலும் ரஷ்யாவிடமிருந்துதான் பெறப்படுகிறது.
மேலும் மாற்று விநியோகங்களைக் கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. எரிசக்தி விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், மேலும் இடையூறு ஏற்படுவதை பல அரசுகள் தவிர்க்க விரும்புகின்றன.
ரஷ்யா பணம் கொடுக்கவேண்டிய நிறுவனங்கள் பணம் பெற மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சர்வதேச வங்கி அமைப்பில் நிகழும் இந்த குழப்பத்தால் விளைந்த ஆபத்து மிகவும் பெரியது என்று சிலர் கூறுகிறார்கள்.
ஸ்விஃப்ட்டிலிருந்து துண்டிக்கப்படுவது ரஷ்யாவின் பொருளாதாரத்தை 5% சுருக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் நிதியமைச்சர் அலெக்ஸி குட்ரின் கூறியுள்ளார். ஆனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் நீடித்த தாக்கம் குறித்து சந்தேகம் உள்ளது.
தனது சொந்த பணப்பரிவர்த்தனை முறையை வைத்துள்ள சீனா போன்ற, பொருளாதாரத் தடைகளை விதிக்காத நாடுகளின் வழியாக ரஷ்ய வங்கிகள் பணம் செலுத்தக்கூடும்.
தொடக்கத்தில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சில நாடுகள் , ரஷ்யாவை ஸ்விஃப்ட் பயன்பாட்டிலிருந்து விலக்கிவைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தயக்கம் காட்டின. இந்தத்தடையானது, பிற நாடுகளையும் நிறுவனங்களையும் பாதிக்கும் என்ற கவலைகளும் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது தடைபடும்.



















