அரசாங்கத்தின் கொள்கைகள் மக்களுக்கு விரோதமானவை. இனியும் அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டியதில்லை. எனவே, என்னுடைய அமைச்சுக்கு புதிய ஒருவரை நியமிக்க வேண்டிவரும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முடிந்தால் அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்குமாறும் சவால் விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடி யாத மற்றும் தாங்கிக் கொள்ள முடியாதளவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகளில் விலைகள் அதிகரிக்கப்படுவதற்கு ஏற்ப இலங்கையிலும் விலைகள் அதிகரிக்கப்பட்டால் அரசாங்கமொன்று எதற்கு? தற்போது நாட்டின் நிலைமையை பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியம் மாத்திரமல்ல யார் வேண்டுமானாலும் வரலாம்.
எனவே, இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆதரவு வழங்காதிருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் கொள்கைகள் அனைத்தும் மக்களுக்கு விரோதமானவை. நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக சிந்தித்துகொண்டிருக்கின்றேன்.
ஆனால், அரசாங்கத்திலிருந்து விலகுவதா அல்லது வெளியேற்றப்படுவதா என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை நாட்டுக்கு சரியாக கூற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு காத்துக்கொண்டிருக்கின்றேன்.
அரசாங்கத்துடன் எனக்கு எவ்வித தொடர்பும் (டீல்) இல்லை. நான் என்னுடைய அமைச்சு கடமைகளிலிருந்து விலகியே இவ்வாறு பேசுகின்றேன்.
எனவே, என்னுடைய அமைச்சு பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்க வேண்டிவரும். எனவே, அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையை எடுக்குமாறு நான் அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.