உரிய அனுமதியின்றி தென்னை மரம் வெட்டுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிலோன் ரீ நாமம் போல, சிலோன் கொக்கனட்டுக்கும் (தேங்காய்) சர்வதேச சந்தையில் சிறந்த கேள்வி உள்ளது. இது எமது பொருளாதாரத்துக்குப் பெரும் பலமாக அமையும்.
தேயிலை தொழில்துறைக்கு நிகரான வருமானத்தை இதன்மூலமும் ஈட்ட முடியும். மரம் வெட்டுதல் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்குள் தென்னை மரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எனவே, இனி கிராம சேவகர், பிரதேச செயலாளரின் அனுமதியின்றி தென்னை மரம் வெட்ட முடியாது. அவ்வாறு வெட்டினால் பொலிஸாரால் கைது செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.