மரியுபோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போர் நீடித்தபடி இருக்கிறது. தொடக்கத்தில் உக்ரைனின் தலைநகர் கிவ் உள்பட அனைத்து நகரங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தின.
சில சிறிய நகரங்களை கைப்பற்றிய ரஷிய படையால் தலைநகர் கிவ் உள்ளிட்ட பெரிய நகரங்களுக்குள் நுழைய முடியவில்லை. உக்ரைன் ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தி தடுத்து நிறுத்தினார்கள்.
இதற்கிடையே கிழக்கு உக்ரைன் மற்றும் துறைமுக நகரமான மரியுபோல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவோம் என்று அறிவித்து ரஷியா அங்கு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.
ஏற்கனவே மரியுபோலுக்குள் நுழைந்த ரஷிய படைகள் அந்நகரத்தை கைப்பற்ற தங்களது தாக்குதல்களை அதிகரித்தனர். உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதலில் மரியுபோல் நகரம் பெறும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள 95 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் அந்நகரில் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்று அந்நகர மேயர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மரியுபோல் நகரை கடந்த 6 வாரங்களாக முற்றுகையிட்டு கடுமையான தாக்குதலை நடத்திய ரஷிய படைகள் அந்நகருக்குள் பெருமளவில் முன்னேறியுள்ளது. இதனால் மரியுபோல் நகரை விரைவில் ரஷியா கைப்பற்றும் நிலை உள்ளது.
மரியுபோலை பாதுகாத்து வந்த உக்ரைன் வீரர்களுக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் சில நாட்களாக கிடைக்கவில்லை. அவர்களை ரஷிய படையினர் சுற்றி வளைத்து விட்டனர். இதனால் உக்ரைன் படையினர் எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ளனர். மரியுபோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
மரியுபோல் நகரை கைப்பற்ற ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. கிரீமியா தீபகற்பத்தையும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பிராந்திய பகுதிகள் இடையே மரியுபோல் அமைந்துள்ளது.
அந்த நகரை கைப்பற்றினால் கிரீமியா மற்றும் டான்பாஸ் இடையே இணைப்பை ஏற்படுத்த முடியும் என்று ரஷியா நினைக்கிறது. இதனால் அந்நகரை கைப்பற்ற ரஷியா முனைப்பு காட்டுகிறது.
இதற்கிடையே உக்ரைன் ராணுவத்துக்கு மேலும் ரூ. 6 ஆயிரம் கோடியில் நவீன ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். ஏற்கனவே உக்ரைனுக்கு ஏராளமான பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















