கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவாக நாளைய மறுதினம் ஞாயிறுக் கிழமை லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு எதிரில் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலிமுகத் திடல் போராட்டகாரர்களை தனித்து விடப் போவதில்லை என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத் திடலில் நடத்தப்படும் போராட்டம் இன்று 15 வது நாளாக தொடர்ந்தும் நடைபெறுகிறது.
கடந்த 9 ஆம் திகதி ஆரம்பித்த இந்த போராட்டத்தின் 14 வது நாளான நேற்று இரவு பெருந்திரளான மக்கள் போராட்ட களத்தில் ஒன்றுக் கூடினர். ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகி செல்ல வேண்டும் என போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.