ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிக்கப்பட உள்ளதாக சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் நேற்று மாலை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளில் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையே இவ்வாறு நிராகரிக்கப்படவுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கும் நோக்கத்துடன் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால், 1978 அரசியலமைப்பின் கீழ் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு இடமில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
1978 அரசியலமைப்பின் பிரிவு 38 2 (அ) இற்கமைய, நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக குற்றப் பிரேரணை மாத்திரமே கொண்டு வர முடியும். அதன் பின்னர் இந்த பிரேரணைக்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு வீதமானோர் கையொப்பமிடப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட வேண்டும்.
நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டவுடன், குற்றச்சாட்டு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதன்பிறகு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த செயல்முறையைத் தவிர, நிறைவேற்று ஜனாதிபதியை நீக்குவதற்கு அரசியலமைப்பில் எந்த நடைமுறையும் இல்லை. எனினும் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர் எனவும், அவர் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை மீறியதால் நம்பிக்கையில்லா பிரேரணையை தாக்கல் செய்துள்ளதாகவும் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய நடைபெறுமா இல்லையா என்பதை சபாநாயகர் இன்று அறிவிக்கவுள்ளார்.