நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த ஹர்த்தாலுக்கு பல தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளன.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் பாடசாலைகள் வெறிச்சோடியுள்ளதுடன், பெரும்பாலான கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.
அத்துடன் பொதுப் போக்குவரத்தும் பகுதியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகள் முடங்கியுள்ளன.
வவுனியா
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகள் பல வெறிச்சோடியுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடாளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
அதன்படி நாடு பூராகவும் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் பலரும் பாடசாலைக்கு சமூகமளிக்காததுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை என்பதால் பாடசாலைகள் வெறிச் சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.