நாடாளுமன்றத்திற்கு அண்மித்த இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (9) தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களினால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இச் சம்பவத்தையடுத்து, அன்று நாடாளுமன்றில் பதற்றமான நிலை ஏற்பட்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் படைக்கல சேவிதர் சேர்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோவைத் தாக்கி, செங்கோலை தூக்க முயற்சித்திருந்தனர்.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சபாநாயகர், சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து அறிக்கை கோரப்படும் என தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இந்த வேளையில் மக்கள் அமைதியாக செயற்படுவது மிகவும் அவசியமானது எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.