நாட்டின் தென்மேல், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும், மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது.
வட மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்று அவ்வப்போது 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்ட மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.