தற்போது நாட்டின் பல பகுதிகளில் வாகனங்களில் எரிபொருள் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கார்களில் இருந்து எரிபொருளைத் திருடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீரிகம பஸ்யால வீதியில் மல்லொஹேவ சந்திக்கு அருகில் இரு வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் பெற்றோல் குழாய்கள் வெட்டப்பட்டு பெற்றோல் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு நபரோ அல்லது சில நபர்களோ கூரிய பொருளின் உதவியுடன் பெற்றோல் குழாய்களை அறுத்து பெற்றோலை திருடி சென்றுள்ளதாகவும் வாகன உரிமையாளர்கள் பெற்றோல் தாங்கிகளில் சுமார் 50 லீற்றர் பெற்றோல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல இடங்களில் இரவு வேளைகளில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளில் இருந்து எரிபொருள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.