ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருக்கும் வரை புலம்பெயர் சமூகம் இலங்கையில் தமது முதலீடுகளை செய்யக்கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் புலம்பெயர் சமூகம் துன்பப்பட்டு சம்பாதிக்கும் பணத்தினை இலங்கையில் கண் மூடித்தனமாக கொட்ட முடியாது என்பதுடன், இலங்கை தொடர்பில் அவர்களிடம் காணப்படும் நிலைப்பாடு, அச்சம் ,வெறுப்பு நியாயமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க என்பவர் மக்களையும்,ராஜபக்ச குடும்பத்தினரையும் காப்பாற்ற வந்தவர் அல்ல. அவர் தன்னையும் தனது கட்சியையும் சார்ந்து பிரதமர் பதவிக்கு வந்தவர் என்பதே உண்மை.
அதாவது கோட்டாபயவின் பெயரை உச்சரித்து அரசியலுக்குள் வந்த இளம் உறுப்பினர்கள் தனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்ற பயத்தினால் ரணிலை தற்போது தலைவராக ஏற்று தமது பதவிகளை தக்கவைத்துக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.