பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சென்னை மையப்பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்திரன் (30). பா.ஜ.,வின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்த இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 7:50 மணிக்கு பாலசந்திரன் தனக்கான பாதுகாப்பு போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்குச் சென்றார். அங்கு சிலருடன் பாலசந்திரன் பேசிக் கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்றார்.
அப்போது பைக்கில் வந்த 3 பேர் பாலசந்திரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். பாலசந்திரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக நிர்வாகி படுகொலை தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.