நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள அரிசி எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் என விவசாய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை செய்யத் தவறினால், செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பாடு
பருவ பயிர் செய்கையில் சிறந்த அறுவடை கிடைக்கவில்லை என்றால் அதற்கு பிறகு அரிசிக்கு ஏற்படும் தட்டுப்பாட்டினை தவிர்க்க முடியாது.
அரிசி இறக்குமதியை தவிர மாற்று வழி இல்லாமல் போய்விடும். எனினும் அதற்கு டொலர் நெருக்கடியால் பாதிக்கப்படும். இந்நாட்டு மக்களின் பிரதான உணவு சோறு. ஆனால் அதற்கு மாற்றாக பலர் பாண் சாப்பிடுவது வழக்கம்.
ரஷ்யா – உக்ரேன் போரினால் கோதுமைக்கு பாதிப்பு
செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டில் உள்ள அரிசி கையிருப்பு குறையும் பட்சத்தில் பாண் உள்ளிட்ட கோதுமை மா பொருட்களை உட்கொள்ள முடியுமா என பேராசிரியர் அருண குமாரவிடம் வினவப்பட்டது. ரஷ்யா – உக்ரேன் போர் கோதுமையின் மீது பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.
அந்த பாதிப்பு இலங்கையை கடுமையாக பாதிக்கும். கோதுமையின் விலை பாரியளவு அதிகரிக்கும். அதனால் சோறு மாத்திரமல்ல பாணும் சாப்பிட முடியாத நிலைமை ஏற்படும். உரத்தை தடை செய்தமையே நாட்டின் இந்த நிலைமைக்கு பிரதான காரணமாகியுள்ளதென என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.