பாரியளவில் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் மதுபான விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மதுபான விற்பனை சுமார் 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என மதுவரித் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மதுபான விற்பனை வீழ்ச்சி மதுவரி வருமானத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அதிகளவு விற்பனை செய்யப்படும் மதுப்பிரியர்கள் அதிகம் கொள்வனவு செய்யும் மதுபான வகையொன்றின் கால் போத்தல் மதுபானம் 550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1500 கோடி ரூபா வருமானம்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களின் விலைகளும் அண்மைய மாதங்களில் இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளன. இதற்கு நிகரான வருமானம் அதிகரிக்கப்படாமையினால் மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாதுள்ளனர்.
மதுபான விற்பனையினால் மாதமொன்றுக்கு அரசாங்கத்திற்கு 1500 கோடி ரூபா வரி வருமானம் கிடைக்கப்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சுங்க வரி மற்றும் உள்நாட்டு இறைவரி என்பனவற்றுக்கு அடுத்தப்படியாக மதுவரியினால் அரசாங்கத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுகின்றது. எனினும் அண்மைய விலையேற்றம் காரணமாக நாட்டில் மதுபான விற்பனை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளது.