ஏழைகளின் நண்பன் என சொல்லப்படும் ஆற்று செல்வமீனுக்கு இன்று அம்பாறை மாவட்டத்தில் அதிக கேள்வி நிலவுகின்றது.
ஆரம்பத்தில் ஒரு கிலோ 200 தொடக்கம் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது செல்வமீனின் விலை 800 தொடக்கம் 1000 ரூபா வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பம் உருவாகிவருகின்றது என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் ஆற்று செல்வமீனுக்கான கேள்வி
ஒரு காலத்தில் வருமானம் குறைந்த மக்களாலே இந்த மீன் அதிகமாக கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆற்று மீனை இன்று பணம் படைத்தவர்களே அதிகமாக கொள்வனவு செய்ய தொடங்கியுள்ளனர். மீனை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு, அதன் சுவை, அதில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் விலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சந்தைக்கு மீன் கொண்டுவரப்பட்டு பல மணிநேரத்தின் பின்னர் விற்பனை செய்யப்பட்ட காலம் கடந்து, மீன் சந்தைக்கு வரும் முன்னரே அதனை பெற்றுக்கொள்ள பல மணிநேரம் மக்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
மீன் சந்தையில் பணம் படைத்தவர்களின் ஆதிக்கம்
மீன் சந்தைக்கு கொண்டுவரப்பட்டாலும் பணம் படைத்தவர்கள் முந்திக்கொண்டு விலையைப்பற்றி கவனத்தில் கொள்ளாது கிலோ கணக்கில் அதிகமாக மீனை கொள்வனவு செய்கின்றனர். இதனால் வியாபாரிகளும் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
எனவே, பணம் படைத்தவர்களிடம் இருந்து மிஞ்சினால் மாத்திரமே ஏனைய மக்கள் மீனை கொள்வனவு செய்யக்கூடிய நிலமை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று வருமானம் குறைந்த மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் மீனுக்கான கேள்வி அதிகரித்தமையே விலையேற்றத்திற்கு காரணமாகவுள்ளதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
மீனின் விலை உயர்விற்கான காரணிகள்
மீனின் விலை உயர்விற்கு இன்னும் பல காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளதை மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் மூலமாக அறிய முடிகின்றது.
வெளிமாவட்ட வியாபாரிகளின் வருகை மற்றும் கட்டுப்பாடின்றிய மீனவர்களின் மீன்பிடி ஆக்கிரமிப்பு, ஆற்றினை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த பிற பிரதேச மீன்பிடியாளர்களின் ஊடுருவல் என்பன மீனின் விலை உயர்வில் தாக்கம் செலுத்துகின்றன.
அதேவேளை, இந்த தவறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிர்வாக முறைமையே காணப்படுவதாக மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மீனின் விலை உயர்வு தொடர்பில் வியாபாரிகளின் கருத்து
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை காரணம் காட்டி குறித்த மீனுக்கான விலையினை வியாபாரிகள் அதிகரித்துள்ள நிலையில் இவ்விலையேற்றமானது மிகப்பெரிய அளவில் வருமானம் குறைந்த மக்களையே பாதித்துள்ளது.
மீன்பிடியாளர்களும் விற்பனையாளர்களும் நாட்டு நிலைக்கேற்பவே நாங்கள் செயற்படுகின்றோம் என கூறினாலும் இது மனச்சாட்சியை மீறிய செயலாகவே வருமானம் குறைந்த மக்களால் பார்க்கப்படுகின்றது.
எனவே, இந்த பிரச்சினைக்கு பிரதேச செயலகம், பிரதேச சபை மீன்பிடி சங்கம் உள்ளிட்டவர்கள் இணைந்து பொருத்தமான நியாயமான தீர்வினை முன்வைத்து ஏழை மக்களை ஓரளவேனும் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.