இன்றைய தினம் தங்களது பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், அருகிலுள்ள பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.
நாட்டின் பல பாகங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழைபெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களால் இன்றைய தினம் தங்களது பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், அருகிலுள்ள பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைய உள்ளது. சீரற்ற வானிலைக்கு மத்தியில், தடையின்றி பரீட்சைகளை நடத்துவதற்கான நடவக்கைகளை எடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
பரீட்சார்த்திகள், தங்களது பரீட்சை மையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுமாயின், அனர்த்த முகாமைத்துவ மையத்தின் 117 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தமது பிரச்சினையை அறியப்படுத்த வேண்டும்.
இதையடுத்து, பரீட்சை பணிக்குழாமினர், கல்வி அதிகாரிளுடன் இணைந்து, புதிய இடத்தில் அவர்களை பரீட்சைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். இதன்போது, பரீட்சார்த்திகளுக்கு உரிய காலம் வழங்கப்படும். அருகிலுள்ள பரீட்சை மையங்களுக்கு சென்றால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதை எவரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.
ஏனெனில், அருகிலுள்ள பரீட்சை மையங்களுக்கு சென்றால், வினாத்தாள் இல்லாமல் போகலாம். எனவே, தங்களின் பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த இடத்திலிருந்து 117 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்க வேண்டும்.
இதையடுத்து, குறித்த மாணவர்களை புதிய பரீட்சை மையத்திற்கு அனுப்ப தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்புகொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.