நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழையுடனான காலநிலையே காணப்படுகின்றது.
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மண்மேடு மற்றும் கற்பாறைகள் சரிவு
நுவரெலியா- ஹட்டன் பிரதான வீதியில் டெஸ்போட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மண்மேடு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இப் பகுதிகளில் பல இடங்களில் ஒரு வழி போக்குவரத்தே பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் இவ் வீதியினை பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாகவும், பனி மூட்டம் காணப்படுவதனாலும் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு சரிந்து விழுந்துள்ள மண் மேட்டினை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் உயர்வு
நுவரெலியாவில் தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
எனவே இந்த நீர் வீழ்ச்சியில் நீராடவோ அருகாமையில் சென்று பார்வையிடவோ வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனத்த மழை காரணமாக டெவோன் உட்பட பல நீர் வீழ்ச்சிகளின் நீர் அதிகரித்துள்ளன.
எனவே இந்த நீர் வீழ்ச்சிகளுக்கு சமீபமாக வாழ்பவர்கள் மற்றும் நீர் வீழ்ச்சியின் கீழ் உள்ள ஆற்றுக்கருகாமையில் வாழ்பவர்கள் மிகவும் அதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.