கோடை விடுமுறைக்கு பலரும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிடுவார்கள். பயணம் உற்சாகத்துடன் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியமானது.
கோடை விடுமுறைக்கு பலரும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிடுவார்கள். கோடையில் குளிர்ச்சியான இடங்களுக்குச் செல்வது மனதுக்கு இதமளிக்கும். மறக்க முடியாத நினைவுகளையும் சுமக்க வைக்கும். ஆனால் பயணம் உற்சாகத்துடன் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியமானது.
பயணத்தின்போது வெளி உணவுகளை உட்கொள்வது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. சில உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும். ஆனால் பயணத்தின்போது பெரும்பாலும் வெளி உணவுகளையே சார்ந்திருக்க வேண்டி இருப்பதால் உணவு வழக்கத்தில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:
* பயணத்தின் போது எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்வதே நல்லது. அதிலும் பயணம் நீண்டதாக இருந்தால், செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவை தவிர்ப்பதே சிறந்தது. வேகவைத்த முட்டை, பருப்பு சாதம், கிச்சடி போன்ற உணவுகளை எடுத்து செல்லலாம். மேலும், பயணத்தின்போது உடலுக்கு ஆற்றலை வழங்கும் பழங்கள், பழச்சாறுகளையும் சாப்பிடுவதற்கு மறந்துவிடக்கூடாது.
* பயணம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் சீக்கிரம் கெட்டுப்போகாத உணவு பதார்த்தங்களை எடுத்து செல்லலாம். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுகளை இரு வேளை சாப்பிடுவதற்கு திட்டமிடலாம். சாலடுகள், உலர் பழங்கள் ஆகியவற்றை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம்.
* பயணத்தின் போது சிலர் சிப்ஸ் போன்ற பொரித்த பொருட்களை சாப்பிடுவதை நிறுத்த மாட்டார்கள். கோடை காலத்தில் எண்ணெய் உணவுகள் சீக்கிரம் ஜீரணமாகாமல் வாயு தொல்லை, அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். எனவே, பயணத்தின்போது இவற்றை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
* பயணத்தின் போது நிறைய தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். முடிந்தால், வீட்டில் இருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லுங்கள். வெளி இடத்தில் தண்ணீர் வாங்க வேண்டும் என்றால், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை மட்டும் வாங்குங்கள். ஜூஸ் அல்லது பிற பானங்களையும் குடிக்கலாம்.
* பயணத்தின் போது மதிய உணவு அல்லது இரவு உணவை சாப்பிடுவதற்கு காலதாமதமாகக்கூடும். மதிய உணவை சாப்பிட முடியாவிட்டால், சீரான இடைவெளியில் ஏதேனும் உணவு பதார்த்தங்களை உட்கொள்வது நல்லது. அதே வேளையில் காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். பயணத்தின் போது வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது. கனமான உணவை உட்கொண்டு விட்டால் அது முழுமையாக ஜீரணமாவதற்கு குறைந்தது 5-6 மணிநேரம் அனுமதிப்பது நல்லது. அதுவரை வேறு எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால் வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பயணத்தின்போது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றினால்தான் பயணம் இனிமையாக அமையும்.
பயணத்தின் போது மதிய உணவு அல்லது இரவு உணவை சாப்பிடுவதற்கு காலதாமதமாகக்கூடும். மதிய உணவை சாப்பிட முடியாவிட்டால், சீரான இடைவெளியில் ஏதேனும் உணவு பதார்த்தங்களை உட்கொள்வது நல்லது.