ஆண்களை விட பெண்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். எந்தெந்த வகையில் மனச்சோர்வு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
ஒரு நபர் மூன்று நாட்களுக்கு மேல் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை கொண்டிருந்தால் மன நல ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்தால், அது கடுமையான மனச்சோர்வாக மாறிவிடும். 6 மாதங்களுக்கும் மேல் நீடித்தால் நாள்பட்ட மன அழுத்தமாக மாறிவிடும். அதில் இருந்து மீள் வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆண்களை விட பெண்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். மன சோர்வின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. அதுதான் பாதிப்பை அதிகரிக்க செய்துவிடுகிறது. எந்தெந்த வகையில் மனச்சோர்வு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
ஆர்வமின்மை:
மனச்சோர்வுக்கான முதன்மை அறிகுறிகளில் ஒன்று, ஆர்வமின்மை. தாங்கள் விரும்பி அடிக்கடி செய்யும் விஷயங்களை கூட ரசித்து செய்ய மாட்டார்கள். பெரும்பாலான நேரங்களை தனிமையில் செலவிடுவார்கள். வழக்கத்தை விட குறைவாக பேசுவார்கள். மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க விரும்பமாட்டார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் கூட ஆர்வம் இல்லாதது மனச்சோர்வுடன் இருப்பதை உறுதிப்படுத்திவிடும்.
கவனம் செலுத்துவதில் சிரமம்:
மனச்சோர்வுடன் இருக்கும் பெண்கள் விருப்பமான செயல்பாடுகளின் மீது கூட கவனம் செலுத்துவதற்கு சிரமப்படுவார்கள். ஏதோ ஒரு விஷயம் அவர்களின் மனதை பாதித்து இருக்கும். அதில் இருந்து மீள்வதற்கு முயற்சிக்காமல் அது பற்றியே நினைத்துப் பார்த்து மனதை குழப்பிக்கொள்வார்கள். அது அவர்களின் வேலை மற்றும் செயல்பாடுகளை பாதிக்கும்.
பசியின்மை:
உணவு விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். விதவிதமாக சமைத்து, ருசிக்கவும் விரும்புவார்கள். எந்த உணவையும் சாப்பிடும் மன நிலை தனக்கு இல்லை என்று ஒரு பெண் சொன்னால் அது மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கலாம். பசியின்மை பிரச் சினையை எதிர்கொள்வார்கள். மனச்சோர்வின்போது தங் களுக்கு பிடித்தமான உணவுகளை கூட சாப்பிடுவதற்கு விரும்பமாட்டார்கள்.
தனிமையை நாடுவது:
ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனச்சோர்வின் அறிகுறி கள் வேறுபடும். மனச்சோர்வு மகிழ்ச்சியை பறித்துவிடும். சோகத்திற்கும் ஆளாக்கிவிடும். தனிமை சிந்தனை மேலோங்கும். தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள். அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இதை புரிந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம். அவர்களுக்கு போதுமான அன்பையும், ஆதரவையும் வழங்குவது அவசியமானது.
காரணம் இல்லாமல் அழுவது:
ஒரு நபர் எந்த காரணமும் இல்லாமல் அழுகிறார் என்றால், அது மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். ஏனென்றால், மனச்சோர்வு உள்ளவர்கள் தங்கள் ஆழ் மனதில் ஏதாவதொரு விஷயத்தை புதைத்து வைத்திருப்பார்கள். அதை நினைத்து பார்த்து அழுவார்கள். அதன் காரணமாக சோகம் குடிகொள்ளும். அது மன ஆரோக்கியத்தை பாதிக்கும் தொடர்ச்சியான செயல்முறையாக மாறிவிடும். எனவே, அழுகை எட்டிப்பார்த்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து மீள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
தூக்கமின்மை:
மனச்சோர்வின்போது எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை தூக்கமின்மை. மனச்சோர்வினால் பாதிக்கப்படுபவர் களுக்கு ரத்த சோகை அல்லது தூங்குவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பார்கள். மனச்சோர்வின் காரணமாக தூக்க சுழற்சி பாதிப்புக்குள்ளாகிவிடும்.