மெனோபாஸ் காரணமாக எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம்.
50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.
உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.
உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.
ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண் டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.
சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற் றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், ‘எக்ஸ்சர்சைஸ் பேண்டு’ எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.
தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.
மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.