இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப் போயுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருளை சீனா அன்பளிப்புச் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.
கர்ப்பிணித் தாய்மாருக்கான மருந்து
எனோக்சபரின் சோடியம் எனப்படும் இந்த மருந்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசியமானதாக காணப்படும் போதும் தற்போதைக்கு இலங்கையில் எந்தவொரு இடத்திலும் கிடைக்காத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பத்து இலட்சம் சீன யுவான்கள் பெறுமதியான இந்த மருந்துகள் அடங்கிய சிரிஞ்சுகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சீனத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதன் இலங்கைப் பெறுமதி 54 கோடி ரூபாவாகும். இந்த அன்பளிப்புத் திட்டத்தின் கீழ் சீன அரசாங்கத்தினால் 512,640 சிரிஞ்சுகள் எனொக்சபரின் சோடியம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
ஆறுமாத கால மருந்துத் தேவை
இலங்கையின் ஆறுமாத கால மருந்துத் தேவையை அதனைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
மருந்துப் பொருட்கள் இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக இன்றைய தினம் 256,320 சிரிஞ்சுகள் இலங்கையை வந்தடையவுள்ளன.
இரண்டாவது கட்ட மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு இந்த மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என்றும் சீனத் தூதரகம் விடுத்துள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.