இலங்கையில் இந்த வருடம் வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் 1.5 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக இலங்கை முதலீட்டுச்சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் முதலீடு செய்ய முக்கிய நிறுவனங்கள் திட்டம்
மருபெனிகுழுமம் இந்தியாவின் அதானிகுழுமம் ஆகியவை இலங்கையில் முதலீடு செய்வதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளன. இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் மீள்புதுப்பிக்கத்த சக்தி துறையில் முதலீடு செய்யவுள்ளன.
மருபெனி குழுமம் 800 மெகாவோட் சூரிய மற்றும் காற்றலை திட்டத்தை முன்னெடுப்பதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது . அதானி குழுமம் ஏற்கனவே 500 மெகாவோட் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துள்ளது.
அதனை 18 முதல் 24 மாதங்களில் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது என ரேணுகா வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார். இதேமாதிரியான திட்டங்களை முன்னெடுப்பது குறித்து இரு சீன நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன.
எரிசக்தி துறை தொடர்பான சட்டங்களில் இலங்கை அரசாங்கம் இந்த மாதம் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது என வீரக்கோன் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் பாரிய திட்டங்களை இலகுவான விதத்தில் நடைமுறைப்படுத்தலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள்
இந்த வருடத்திற்கான எங்கள் இலக்குகளை அடைவோம் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கையில் முன்னெடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுமென்றால் எங்களால் எங்களின் இலக்குகளிற்கு அப்பாலும் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் காலாண்டு கால பகுதியில் இலங்கை முதலீட்டு திட்டங்கள் மூலம் 226 மில்லியன் டொலர்கள் கிடைத்தன என குறிப்பிட்டுள்ள ரேணுகா வீரக்கோன் 2021 ம் ஆண்டை விட இது 16 வீதம் அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.
பல துறைகளில் முதலீடு செய்ய நாடுகள் விருப்பம்
இந்தியா,சீனா,பிரிட்டன்,அமெரிக்கா உட்பட பல நாடுகள் 1.46 பில்லியன் டொலர் பெறுமதியான 49 முதலீட்டு திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்துள்ளன. அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் உற்பத்தி ஆடை, சுற்றுலாத்துறை உட்பட பல துறைகளில் முதலீடு செய்வதற்கு பல நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான தருணத்தில் கூட எங்களிற்கு விண்ணப்பங்கள் வந்தன என தெரிவித்துள்ள ரேணுகா நெருக்கடிகள் முடிவிற்கு வரும் என பல முதலீட்டாளர்கள் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.