ரணிலும் கருவும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இணைந்து புதிய நாடாளுமன்ற குழுக்களை அமைப்பது தொடர்பில் இணக்கத்தை எட்டியுள்ளனர்.
பிரதமர் தம்முடன் கலந்துரையாடியதாகவும், இதனையடுத்து நாடாளுமன்றக் குழுக்களில் இணைந்து செயற்பட சம்மதித்ததாகவும் ஜெயசூர்யா கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியலில் கரு
முன்னதாக மகிந்த ராஜபக்சவுக்குப் பதிலாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தேசியப் பட்டியல் மூலம் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று செய்திகளும் ஊகங்களும் வெளியாகியிருந்தன.
எனினும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம் அந்த ஊகம் நிராகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் தாம், தலைவராக இருக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம், ஜனநாயகத்திற்காக பணிசெய்கிறது என்றும், அது நாடாளுமன்றம் மற்றும் அரச நிறுவனங்களை ஜனநாயகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் என்றும் ஜயசூரிய கூறியுள்ளார்.
இதன் விளைவாக, நாடாளுமன்றக் குழுக்களில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு பிரதமரின் அழைப்பை தமது சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
சில குழுக்களில் கோட்டா கோ கம பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என பிரதமரிடம் கூறியதை தானும் ஏற்றுக்கொண்டதாக ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட 15 நாடாளுமன்றக் குழுக்களில் தலா நான்கு இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க பிரதமர் அண்மையில் முன்மொழிந்திருந்தார்.
கோட்டா கோ கம
அதில் ஒன்று இளைஞர் நாடாளுமன்றத்தால் அமைக்கப்படும். மற்ற மூன்று குழுக்களும் எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்களை கொண்டு அமைக்கப்படும் என்றும் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரதமர் சார்பாக GGG( கோட்டா கோ கம) பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அத்தகைய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படவில்லை என்று ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருடன் அரசியல் ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும், நாடாளுமன்றக் குழுக்களுடன் மட்டுமே தமது பங்களிப்பு இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்