உலக சுகாதார அமைப்பு (WHO) கொழும்பு மாவட்டத்திற்கு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 05ம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2052 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக WHO இலங்கை தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் 1050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கடந்த வாரம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டில் மொத்தம் 18,782 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில், நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியர் சுதத் சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.