உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
டுவிட்டரின் ஸ்பாம் போட் கணக்குகள் அல்லது போலி டுவிட்டர் கணக்குகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதிலளிக்காவிட்டால், டுவிட்டரை கொள்வனவு செய்யப் போவதில்லை என மஸ்க் மிரட்டல் விடுத்துள்ளார்.
போலிக் கணக்குகள்
டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மஸ்க், தனது சட்டத்தரணிகள் ஊடாக டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
229 மில்லியன் டுவிட்டர் பயனர்களில் எத்தனை போலிக் கணக்குகள் உண்டு என்பதனை அறிந்து கொள்வதற்காகவே தாம் இந்த விபரங்களை கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் போலிக் கணக்குகள் பற்றிய விபரங்களை வழங்க மறுத்தால் தாம் இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய முனைப்புக்களை கைவிட நேரிடும் என மஸ்க், டுவிட்டர் நிறுவனத்திற்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.