அரச உத்தியோகத்தர்களை தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்புவது தொடர்பில் சுற்றுநிரூபத்தை விரைவில் வெளியிடுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளரும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சருமான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் வேலைத்திட்டம்
மேலும் தெரிவிக்கையில், அரச உத்தியோகத்தர்களை வேலை வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
தொழில் அமைச்சு இதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, சுகாதார அமைச்சும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக தாதியர் சேவை உள்ளிட்டவற்றுக்கான சட்டங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சருடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வெகுவிரைவில் சுற்றுநிரூபமொன்றை வெளியிடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கடன் இன்றி டொலரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் ஆகும்.
மார்ச்சில் வருமானம் வீழ்ச்சி
எனினும் இதன்மூலம் கிடைக்கப் பெறும் டொலர் வங்கி முறைமை ஊடாக நாட்டுக்கு அனுப்பப்படாமையின் காரணமாக 700 மில்லியன் டொலராகக் காணப்பட்ட வருமானம் கடந்த மார்ச்சில் 230 மில்லியனாக வீழ்ச்சியடைந்தது.
எனவே வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் வங்கி முறைமை ஊடாக தமது பணத்தை அனுப்புவார்களாயின் இந்த வருமானத்தை 500 மில்லியன் டொலராக அதிகரித்து அதன் மூலம் நாட்டில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
விசேட சலுகைகள்
எனவே வெளிநாடு செல்பவர்களுக்கான விசேட சலுகைகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளார்.