முகநூல் ஊடாக நட்புறவை ஏற்படுத்திக்கொண்ட நபருடன் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு சென்று மது அருந்திக்கொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட நபரையும் அவரது நண்பரையும் மயக்கமடைய செய்து, முகநூலில் நட்புறவை ஏற்படுத்தக்கொண்ட நபரிடம் இருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பானத்துடன் தூளை கலந்த பெண்
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் பானத்துடன் ஏதோ ஒரு தூளை பெண் கலந்ததை தான் கண்டதாகவும் அதன் பின்னர் மயங்கி விழுந்து விட்டதாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற பெண், நபரின் காரையும் எடுத்துச் சென்று இடையில் கைவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த நபர், தென் கொரியாவில் தொழில் புரிந்து விட்டு, இலங்கை திரும்பி வாகனங்களை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 41 வயதான நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
தனது நண்பன் மற்றும் முகநூலில் சில தினங்களுக்கு முன்னர் அறிமுகமான பெண்ணுடன் இந்த நபர், தனது நண்பனின் காரில் திஸ்ஸமஹாராமவுக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார்.இதன் பின்னர், திஸ்ஸமஹாராம திஸ்ஸ குளத்திற்குள் அருகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.
27 லட்சம் ரூபாய் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளை
அங்கு இந்த பெண், குறித்த நபருக்கும் அவரது நண்பருக்கும் பானம் ஒன்றை அருந்த கொடுத்து விட்டு, ஒருவரிடம் இருந்த 27 லட்சத்து 51 ஆயிரம் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விடுதியில் இரண்டு அறைகளை பெற்றுக்கொண்டதுடன் ஒன்றில் அவரும், சந்தேக நபரான பெண்ணும் மற்றைய அறையில் நண்பரும் தங்கியுள்ளனர். அன்றைய தினம் மாலையில் இருவரும் மதுபானம் அருந்த தயாரான போது, சந்தேக நபரான பெண் இனிப்பு பானத்தை தயாரித்து வழங்கியுள்ளார்.
இருவரும் உடனடியாக அந்த பானத்தை அருந்தியுள்ளனர். அதன் பின்னர் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதுடன் உடலில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிற்பகல் 4 மணியளவில் நடந்துள்ளது.
இதனையடுத்து இரவு 7.30 மணியளவில் விழித்து பார்த்த போது வர்த்தகரிடம் இருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. நண்பரும் ஒரு இடத்தில் விழுந்து கிடந்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணைகளின் பின்னர் திஸ்ஸ குளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த காரை கண்டுபிடித்துள்ளனர். சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்காக திஸ்ஸமஹாராம பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.