நிபந்தனையும் நீக்கம்
கடந்த இரண்டு மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்த “திறந்த கணக்கு முறை” நிபந்தனையுடன் நீக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் வர்த்தகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.
திறந்த கணக்கு என்பது ஒரு வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதியாளருக்கும் உள்நாட்டில் உள்ள இறக்குமதியாளருக்கும் இடையிலான நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொள்ளப்படும் ஒரு ஏற்பாடாகும்.
திறந்த கணக்கு முறை என்றால் என்ன?
இதன் கீழ் நாணயக்கடிதம் அல்லது டெலிகிராப் ட்ரான்ஸ்பர் என்பதற்கு அப்பால், ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டில் (இலங்கையில்) உள்ள இறக்குமதியாளர்களும் வங்கிகளுக்கு ஊடாக தமது கொடுப்பனவு மற்றும் பெறுதல்களை மேற்கொள்ளமுடியும்.
இதன்படி வாடிக்கையாளர் ஒத்திவைக்கப்பட்ட (பிற்போட்டப்பட்ட) கட்டண அடிப்படையில் பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
வர்த்தகர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடந்த வியாழக்கிழமை சந்தித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொள்கை மாற்றத்தை இறுதி செய்வதற்காக , பிரதமர் நேற்று மத்திய வங்கி ஆளுநர் மற்றும் ஏனைய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இறக்குமதி பொருட்கள்
திறந்த கணக்கு முறையின் மூலம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் பொருட்களில் சிவப்பு அரசி, நாடு மற்றும் சம்பா, கோதுமை மா, சர்க்கரை, முழு உளுத்தம் பருப்பு, மஞ்சள் முழு பருப்பு, மஞ்சள் சிவப்பு பட்டாணி, காய்ந்த மிளகாய், கொண்டைக்கடலை, கொத்தமல்லி, சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் கடுகு விதைகள் என்பன அடங்குகின்றன.
நிதி விடுவிப்பு
ஜூன் 6 முதல் நடைமுறைக்கு வந்த திறந்த கணக்குகளுக்கான தற்காலிக தடை காரணமாக பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வர்த்தகர்கள் அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, திறந்து கணக்குக்கான தடை நீக்கம் தவிர, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய கூடுதலாக 100 மில்லியன் டொலர்கள் விடுவிக்கப்படவுள்ளன.