கிளிநொச்சி மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் அரிசி ஆலைகள் மற்றும் அரிசி விற்பனை நிலையங்களில் தொடர்பில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று முன்னெடுக்கப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்கக் கூடிய விலையினை பொறித்த அல்லது காட்சிப்படுத்திய அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு எதிராகவும் விலை காட்சிப்படுத்தாது அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடீர் சோதனை நடவடிக்கை
அத்தோடு எதிர்வரும் நாட்களிலும் அரிசி விற்பனை விலை தொடர்பான திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு முறைகேடுகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அதிகளவான நெல்லினை இருப்பில் வைத்துள்ள போதிலும் அதனை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகம் செய்ய மறுக்கும் பதுக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவிப்பு
பொதுமக்கள் அரிசி கொள்வனவின் போது விலை தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன், முறைகேடான வியாபார நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யுமாறும் அல்லது பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை துரித சேவை இலக்கமான 1977 ஊடாகவும் முறைப்பாடுகளை வழங்க முடியும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.