40,000 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல் இன்றுடன் (15ம் திகதி) ஐம்பது நாட்களாக விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த எரிபொருள் தாங்கிய கப்பல் ஏப்ரல் 26ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பலை விடுவிப்பதற்கு தேவையான டொலர்கள் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்தில் நங்கூரமிட தாமத கட்டணமாக நாளொன்றுக்கு 18,000 டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை விடுவித்திருக்க முடியும்
எரிபொருள் தாங்கி விடுவிக்கப்பட்டிருந்தால், நாட்டில் உள்ள ஆறு மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
30,000 மெற்றிக் தொன் எரிபொருள் எண்ணெய் விடுவிக்கப்பட்டிருந்தால் யுகடனவி, சபுகஸ்கந்த 1 மற்றும் 2, கொலன்னாவ, மத்துகம மற்றும் துறைமுக மிதக்கும் தொகுதி மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை விடுவித்திருக்க முடியும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும், அந்த முடிவை எடுக்கத் தவறியதால், போக்குவரத்துக்கான 1500 மெட்ரிக் தொன் டீசலை யுகதானவி மின் உற்பத்தி நிலையத்திற்கு விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.