ரஷ்யாவை தளமாகக் கொண்ட ஏரோஃப்ளோட் விமான நிறுவனம், தனது விமானங்கள் மீண்டும் தடுத்து வைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்தால், இலங்கைக்கான விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜனிதா ஏ. லியனகே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தரப்பின் உத்தரவாதத்தின் பேரில் கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு விமான அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் விதித்த தடை
ரஷ்யாவின் ஏரோபுளொட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றினை இலங்கையிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அண்மையில் தடைவிதித்திருந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் சட்டமா அதிபர் தலையிட்டு, தடை உத்தரவை நிறுத்தி வைத்தார்.
நீதிமன்ற வழக்கு முழுமையாக முடியும் வரை விமான நிறுவனம் காத்திருக்கும் என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். விமான நிறுவன அதிகாரிகளை நம்ப வைக்க நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.