பொதுவாக முருகனை வழிபடுவதற்கு உரிய சிறந்த மாதங்களாக வைகாசி, கார்த்திகை மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுக்கு இணையாக ஒரு அற்புதமான முருக வழிபாட்டிற்குரிய தினமாக ஆனி மாத கிருத்திகை தினம் வருகிறது.
இந்த கிருத்திகை தினத்தில் எவ்வாறு முருகனை வழிபட்டால் எத்தகைய பலன்களை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். முருகப்பெருமானின் முழுமையான ஆற்றல் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு செந்நிற ரோஜா பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.
வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக காயத்திரி மந்திரம், மூல மந்திரம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு கீரை சாதம், பச்சை நிற இனிப்புகள் போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு செவ்வரளி, சிவப்பு ரோஜா, செந்தாமரை போன்ற மலர்களை சமர்ப்பித்து தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
மேற்கண்ட முறையில் முருகனை ஆனி மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு முடித்ததும், அருகிலுள்ள முருகன் கோயிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு. மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் யாசகர்களுக்கும், வசதியற்ற ஏழை மக்களுக்கும் கீரை சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்வது நன்று. மேற்கூறிய முறையில் ஆனி கிருத்திகை தினத்தன்று முருகனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படுகின்ற பாதக பலன்கள் நீங்கும். பிறருடன் ஏற்பட்ட பகை விலகி சமாதானம் உண்டாகும்.
உடன்பிறந்த சகோதரரர்களுடனான சொத்து தொடர்பான பிரச்சினைகள் நீங்கி அனைவருக்குமேற்ற சுமூக தீர்வு ஏற்படும். கல்வியில் மந்த நிலை அடைந்த குழந்தைகள் மிகுந்த சுறுசுறுப்பு பெற்று கல்வியில், கலைகளில் சிறப்பார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்கள், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் எதிர்ப்புகள் நீங்கும். புதிய வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும்.