வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.
இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும். மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருளுவார் குரு பகவான். திட்டை குருபகவானை விரதம் இருந்து வியாழக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து தரிசியுங்கள். குருவின் பார்வை நம் மீது பட்டாலே போதும்… குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம். நல்ல படிப்பிருந்தும் வேலை இல்லை என்று வருந்துவோர், அதிக சம்பளம் இல்லையே என்று கலங்குவோர், உரிய வயது வந்தும் திருமணம் இன்னும் கைகூடவில்லையே என்று கண்ணீர் விடுபவர்கள், திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து, தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் குரு பகவானை வணங்கி வழிபடுங்கள். தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.