உலகளாவிய ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள்ளது. மக்கள் புரட்சியால் ஒரு அரசாங்கத்தை முற்றுமுழுதாக மாற்றியமைக்க முடியும் என்பதற்கு சமகாலத்தில் சிறந்த உதாரணமாக இலங்கையை குறிப்பிட முடியும்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பிரம்மாண்டமான முறையில் ராஜபக்ச குடும்பம் கடந்த 2019ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.
வரலாற்று வெற்றியை பதிவு செய்த ராஜபக்ச குடும்பம்
குறிப்பாகச் சொல்லப்போனால், கடந்த 2015ஆம் ஆண்டில் தோல்வியைத் தழுவிக் கொண்ட ராஜபக்ச அரசாங்கம் அனைத்தையும் குறுகிய காலத்தில் சரி செய்து கொண்டு மிகப்பெரிய வெற்றியை 2019இல் பதிவு செய்தது. அதற்கு நல்லாட்சி அராங்கத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பாரிய பங்களிப்பைச் செய்தது என்பதும் மறுக்க முடியாததே.
இது ராஜபக்சர்களின் மீள் அவதாரம். கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் பரிணாமம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.
ராஜபக்சர்களை சிங்களவர்கள் கொண்டாடுவதற்கு முழுமுதற் காரணமாக இருந்த யுத்த வெற்றியின் கதாநாயகனாக கோட்டாபய ராஜபக்சவை குறிப்பிடலாம்.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், அதன் இறுதிக்கட்டத்திலும் ராஜபக்ச அரசின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மீது சிங்கள மக்களுக்கு இருந்த அதீத நம்பிக்கையே 2019 ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியும் அதன் பின்னரான வெற்றிகளும் என்று சொன்னால் மிகையாகாது.
ஆனால் அத்தனை புகழுக்குரிய வீரனாக சிங்கள மக்களால் பார்க்கப்பட்ட கோட்டாபய வீழ்ந்தது எப்படி? இன்று சர்வதேசமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போது மிகவும் கோழைத்தனமான தோல்வியைச் சந்தித்து புறமுதுகு காட்டி ஓட வைத்தது எப்படி என்ற வினா எழுமேனால் அதற்கு கோட்டாபயவே காரணமாக இருப்பார்.
பௌத்தத்தை ஆயுதமாக்கிய ராஜபக்ச தரப்பு
பௌத்தத்தோடும் சிங்கள மொழியோடும் பின்னிப் பிணைந்த இலங்கை அரசியல் வரலாற்றில், ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ளவும், நீடித்து நிலைத்திருக்கவும், இவ்விரண்டையும் தமது மந்திர உச்சாடனமாக அதிகார தரப்பினர் கொண்டிருந்தனர். கொண்டிருக்கின்றனர்.
இற்றை வரைக்கும் இலங்கை அரசியல் வரலாற்றை தீர்மானிப்பது பௌத்தமும் சிங்கள மேலாண்மை வாதமும் அன்றி வேறு ஒன்றாக இருந்ததில்லை. அப்படியொரு மந்திரத்தை உச்சரித்தே ராஜபக்ச தரப்பு மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது.
இலங்கையை மீட்பதும், காப்பதும் தம்மைத் தவிர வேறு ஒருவர் இல்லை என்பதை சிங்கள மக்களிடையே ஆழப் பதியச் செய்து மீண்டும் மீண்டெழுந்தனர். ஆனால், அனைத்தும் இரண்டு ஆண்டுகளில் தவிடு பொடியானது என்பதை அவர்களே உணர்ந்து கொண்டார்கள்.
மைத்திரி ரணில் கூட்டாட்சியை நம்புவதால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதை சிங்கள மக்களிடம் எடுத்துச் சென்றதுடன், ராஜபக்சக்களின் கைகளிலேயே தேசிய பாதுகாப்பு இருப்பதாகவும், போரை முடித்த கோட்டாபயவே நாட்டை பாதுகாப்பார் என்பதையும் தெள்ளத்தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
கோட்டாபயவின் வெற்றியும் அதனையே வெளிப்படுத்தியது. இலங்கை வரலாற்றில் தனிப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற ஒரேயொரு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச உருவெடுத்தார்.
அவரின் வெற்றி என்பது சிங்கள மக்களின் மீட்சியாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய, தான் இந்த நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்ததாக சூளுரைத்தார்.
இலங்கையில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி தான் வெற்றியீட்டியதாகவும், பெரும்பான்மை மக்களின் வாக்குகளை மட்டும் கொண்டு வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். அவரின் வார்த்தைகள் தவறானதும் அல்லது.
முதலாவது சாதனை
உண்மையில் இலங்கை அரசியல் வரலாற்றில் தனிப் பெரும்பான்மை மக்களின் அதுவும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி வெற்றி பெற்ற ஒரே ஜனாதிபதி என்ற சாதனையை கோட்டாபய படைத்தார்.
அது அவரின் முதலாவது சாதனையாக கொள்ள முடியும். அதிகாரத்தைப் பொறுப்பேற்ற கோட்டாபய, அரச அலுவலகங்கள், திணைக்களங்கள், கிராமங்கள் என்று ஆரம்பத்தில் தன்னை மக்கள் நாயகனாக மாற்றும் விம்பத்தை கட்டமைத்தார்.
எனினும், எடுத்த பொருளாதாரக் கொள்கையும், கட்டமைத்த அமைச்சரவையும், எடுக்கப்பட்ட முடிவுகளும், நிறைவேற்று அதிகாரமும் கோட்டாபயவின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு நிலைமை மாறியது. தான் எடுத்த முடிவுகளிலிருந்து கீழிறங்காமல், அதனை நிறைவேற்றியதன் விளைவுகளை அவரே அறுவடை செய்யும் அளவிற்கு இரண்டு ஆண்டுகளில் நிலைமை தலைகீழானது.
தனிப்பெரும்பான்மை மக்களின் வாக்குகளால், சிறுபான்மை மக்களின் ஆதரவு இன்றி வெற்றி பெற்றவன் என்ற அந்த அகந்தையை அதே பெரும்பான்மை மக்கள் இழக்கச் செய்திருக்கிறார்கள்.
இரண்டாவது சாதனை
இலங்கையில் ஏற்பட்ட இந்தப் பொருளாதார சீரழிவின் பின்னர், சிங்கள மக்கள் விழித்துக் கொண்டனர் என்கிறார்கள் தென்னிலங்கை அரசியல் பேச்சாளர்கள். சிங்கள பௌத்த அடிப்படை வாதங்களால் ஏமாற்றப்பட்டோம் என்பதை சிங்கள மக்களில் கணிசமானவர்கள் உணர்ந்தார்கள் என்பதை அண்மைய போராட்டங்கள் எடுத்தியம்பியது.
குறிப்பாக கூறின், இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதிக்கு எதிராகவும் பொதுமக்கள் வீதிக்கு இறங்கியது இல்லை. ஜேவிபி கிளர்ச்சியாகட்டும், விடுதலைப் புலிகளின் போராட்டமாகட்டும், அனைத்துமே அதிகார மையத்திற்கு எதிராக இருந்ததே அன்றி, தனி ஒரு ஜனாதிபதிக்கு எதிராக இருந்தது இல்லை என்பது வரலாறு.
இவ்வாறிருக்க, கோட்டாபய ராஜபக்ச தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. அவருக்கு எதிராக சொந்த மக்கள், அதாவது, அவரே கூறிய தனிப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவன் என்ற அதே மக்கள் இன்று வீதியில் இறங்கி வீட்டுக்குச் செல்… என்று கத்தும் அளவிற்கு சாதித்திருக்கிறார் கோட்டாபய. ஆக, இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவரை பொது மக்களே வீட்டுக்குச் செல் என்று கூறும் அளவிற்கு இரண்டாவது சாதனையை படைத்திருக்கிறார் கோட்டாபய.
மூன்றாவது சாதனை
மூன்றாவதும், சர்வதேசம் முழுவதும் உற்றுநோக்கும் சாதனையை கோட்டாபய படைத்துள்ளார். ஆம்… இன்று அந்த சாதனை கோட்டாபயவால் நிகழ்த்தப்பட்டது.
சிங்கள தனிப்பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சியைக் கைப்பற்றிய யுத்த வெற்றி நாயகன் கோட்டாபய பதவி விலகி விட்டார்…. அதுவும் அவரை ஆட்சியில் அமர்த்திய அதே சிங்கள தனிப்பெரும்பான்மை மக்களால் ஆட்சியை விட்டு துரத்தியடிக்கப்பட்டார் என்ற வசனம் மிகப் பொருத்தமானதே..
வரலாற்றில் எந்தவொரு தலைவரும் எதிர்கொள்ளாத படுமோசமான தோல்வியை தழுவிக் கொண்டு புறமுதுகு காட்டி நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
தன்னை மிகப்பெரிய செயல்வீரனாகக் காட்டிக் கொண்டு ஆட்சியில் அமர்ந்த கோட்டாபய இன்று பகிரங்கமாக பதவியை விட்டு விலகிச் செல்ல முடியாத நிலையை அடைந்துள்ளார்.
குறிப்பாக கோட்டாகோஹோம் என்னும் கோசம் அவரை வீட்டுக்கு அனுப்பும் ஆரம்ப புள்ளி… அதுமாத்திரமன்றி போராட்டக்காரர்கள் முதலில் கோட்டாபயவையே பதவி துறக்குமாறு வீதியில் இறங்கினர். ஆனால் முதலில் பதவியை துறந்தது மகிந்தவும், அமைச்சரவையும்.
யாரை மக்கள் வீட்டுக்குப் போகச் சொன்னார்களோ அவர் முதலில் பதவி விலகவில்லை. அதன் பின்னர் வெடித்த மக்கள் புரட்சி இன்று அவரை பதவி விலக வைத்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச பல எதிர்ப்புக்களையும், போராட்டங்களையும் சந்தித்தாலும், தான் தோல்வியுற்ற ஜனாதிபதியாக பதவி விலகமாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்… ஆனால் இன்று அந்த அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது…
அதன்படி, இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் மக்கள் எதிர்ப்பின்பால் பதவியை துறந்த முதல் ஜனாதிபதி என்ற சாதனையை படைத்துள்ளார் கோட்டாபய.
இதுவே அவரின் மூன்றாவது சாதனையாக உள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் அவர் பதிக்கும் பெரும் தடமாகவும் இது அமைந்துள்ளது. இதை எண்ணியோ என்னமோ அவர் தான் தோல்வியுற்ற ஜனாதிபதியாக வீட்டுக்குச் செல்லமாட்டேன் என்று கூறியிருக்கலாம்….
தன்னைப் பதவிக்கு அமர்த்திய மக்களின் எதிர்ப்பினாலேயே பதவியில் இருந்து துரத்தியடிக்கப்பட்டாலும் வரலாற்றில் அவரும் சாதனை தலைவராகவே பார்க்கப்படுவார்…