பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இன்று காலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்க புதிதாக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதும் பிரதமர் அரசியலமைப்பு ரீதியாக பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் எனவும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட முடியும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலால் வெற்றிடமடைந்த ஜனாதிபதி பதவிக்கு அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை பிரதமரை பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ய முடியும் என பேராசிரியர் பிரதாப மஹாநாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் வாரிசு ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் எனவும், தேவைப்பட்டால் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிக வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதவி விலகல் கடிதம் போலியானது
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்த கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் சபாநாயகரின் ஊடக அலுவலகம் தெரிவித்திருந்தது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறி மாலைதீவு சென்றிருந்த நிலையில், இன்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.