எதிர்வரும் 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை ஜனாதிபதியின் அதிகாரங்கள், பொறுப்புக்கள் மற்றும் அரசியலமைப்பினால் பொறுப்பாக்கப்பட்டுள்ள விடயங்களை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன சற்றுமுன் அறிவித்துள்ளார்.
ஜுலை 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உத்தியோகபூர்வமான அவர் பதவி விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்றம் நாளைய தினம் கூடுவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை ஜனாதிபதியின் அதிகாரங்கள், பொறுப்புக்கள் மற்றும் அரசியலமைப்பினால் பொறுப்பாக்கப்பட்டுள்ள விடயங்களை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற விவகாரங்களை விரைவில் நடத்துவதே எனது நோக்கம். இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இந்தக் காலப்பகுதியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு சபாநாயகர் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நாடாளுமன்றத்திடமும் கேட்டுக்கொண்டார்.
கட்சித்தலைவர்கள் கூட்டம்
இன்றைய தினம் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.